ஒரு சமயம் பிரளயம் ஏற்பட்டபோது அமிர்த கும்பம் அடங்கிய கலசம் பிரளயத்தில் மிதந்து வந்து இங்கு தங்கியது. சிவபெருமான் கிராத மூர்த்தி வேடம் தாங்கி ஒரு பாணமெய்தி குடத்தை உடைத்து சிருஷ்டியை துவக்கி வைத்தார். குடம் தங்கிய இடமாதலால் இத்தலம் 'குடமூக்கு' என்று பெயர் பெற்றது. தற்போது 'கும்பகோணம்' என்று அழைக்கப்படுகிறது. இந்த நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நாகேஸ்வரன் கோயிலே 'குடந்தைக் கீழ்க்கோட்டம்' என்று அழைக்கப்படுகிறது. ஆதிசேஷன் வந்து பூசித்த தலமாதலால் 'நாகேஸ்வரன் கோயில்' என்றும் வழங்கப்படுகின்றது.
மூலவர் நாகேஸ்வரர், லிங்க வடிவத்தில் காட்சி தருகின்றார். இவர் 'மாதொரு பாகர்' என்றும் அழைக்கப்படுகின்றார். அம்பிகைக்கு 'பெரிய நாயகி' என்னும் திருநாமம்.
பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமகம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அப்போது லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள். ஒவ்வொரு ஆண்டும் மாசி மக தினத்தன்று இக்கோயில் சுவாமி இடப வாகனத்தில் மகாமக குளத்திற்கு எழுந்தருளுவார்.
சூரியன் இத்தலத்து இறைவனை பூசித்து பேறு பெற்றதாகத் தலபுராணம் கூறுகிறது. அதற்கு அறிகுறியாக ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் 11, 12, 13 ஆகிய மூன்று நாட்களிலும் காலை நேரத்தில் சூரிய ஒளி மூலவர் மீது விழுகிறது.
ஊரின் நடுவே அமைந்துள்ள சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த பெரிய கோயில் இது. சூரியன் சன்னதியும் சிற்ப வேலைப்பாடுடையது. நடராஜர், பிரளய கால ருத்திரர், காளி, மாரியம்மன் சன்னதிகள் சிறப்பு வாய்ந்தவை.
மகான் பாடகச்சேரி சுவாமிகள் இக்கோயில் கோபுரத் திருப்பணி செய்துள்ளார். அவரது திருவுருவச் சிலை கோபுரத்தின் மீது உள்ளது.
திருநாவுக்கரசர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|